Thursday, August 8, 2013


வணக்கம்

எனது நண்பர் இரவிச்சந்திரன் தனது மகளுக்கு பாவேந்தரின் இந்த பாடல் தேவைப்படுகிறது எனவே இப்பாடலை எனக்கு தேடித்தரும்படி கேட்டார். நானும் இப்பாடலை சிறிது சிரமப்பட்டு தேடினேன் அதனால் தான் இதனை பதிவு செய்கிறேன்.

 
 
படி
 
எடுப்பு
 
நூலைப்படி சங்கத்தமிழ்
நூலைப்படிமுறைப்படி
நூலைப்படி
 
உடனெடுப்பு
 
காலையிற்படி கடும்பகல் படி
மாலை, இரவு பொருள்படும்படி               நுலைப்படி
 
அடிகள்
 
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டும் அப்படிக்
கல்லாதவர் வாழ்வ தெப்படி?                     நூலைப்படி
 
அறம்படி பொருளைப் படி
அப்படியே இன்பம் படி
இறந்த தமிழ் நான்மறை
பிறந்த தென்று சொல்லும்படி                    நூலைப்படி
 
அகப்பொருள் படி அதன்படி
புறப்பொருள் படி நல்லபடி
புகப்புகப் படிப்படியாய்ப்
புலமைவரும் என்சொற்படி                         நூலைப்படி
 
சாதி என்றும் தாழ்ந்தபடி
நமக்கொல்லாம் தள்ளுபடி
சேதி அப்படி தெரிந்துபடி
தீமை வந்திடுமே மறுபடி                              நூலைப்படி
 
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூற்களை ஒப்புவ தெப்படி? — நூலைப்படி
 
தொடாங்கையிலே வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகும் என்ற ஆன்றோர் சொற்படிநூலைப்படி
 
பாவேந்தர் பாரதிதாசன்
குயில் 01.01.1948